பீடியின் புகைமூட்டத்திற்குள்ளிருந்து மங்கலாய் வெளிவந்த முகம் யாருடையது என்று முடிவு செய்ய பெரும் முயற்சி எதுவும் தேவைப்படுவதில்லை. ஒரு சிறு புன்னகையிலோ அல்லது பீடி புகைவழியோ பக்கத்து வீட்டு தாத்தாவை எளிதில் கண்டுகொள்ளலாம்.
அதே வறட்டு இருமல், முடிந்தததும் மெள்ள திரும்பி ஆரம்பகாலம் முதல் பார்த்த மாற்றமில்லாத புன்னகை. எண்பதுகளின் விளிம்பில் இருந்தாலும் சதையோ சர்க்கரையோ தாத்தாவை நெருங்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்துக்கொண்டிருந்தது. அவரின் நடையோ, புகையோ ஏதோவொன்று அவரை ஆரோக்கியமாக காட்டிக்கொண்டிருந்தது. அதிகம் முடி இல்லாமல் ஆங்காங்கே சூரிய ஒளி உறிஞ்சும் உருண்டை தலை, குழிந்த பிரகாசமான கண்கள் அவர் புன்னகைக்கையில் உடன் புன்னகைக்கும்.
"அப்பிடியே என்ன மெயின் ரோட்ல வுட்டுடேன் பா" தாத்தா என்னிடம் பேசிய முதல் சொற்றொடர்.
"மின்னலாம் நானே தா நடந்து போவேன்.. எங்க.. வயசாய்டுசில்ல.. நடக்க முடியல..
நிறுத்திக்கோ நிறுத்திக்கோ.. இங்க இறங்கிக்றேன்"
கண்களால் புன்னகைத்தபடி மெதுவாக நடந்து சென்றார்.
"தாத்தா அந்த காலத்துலே கணக்குபிள்ளையா இருந்தவராம்டா.. ஊரிலே நல்ல செல்வாக்காம்.. பாவம் இங்க வந்து தா கஷ்டபடுறாரு" தாத்தாவை அடிக்கடி நான் கூர்ந்து கவனிக்கும்போதெல்லாம் அம்மா தவறாமல் சொல்லும் வாக்கியம் இது. பல தடவை கேட்டிருந்தாலும் ஒவ்வொரு தடவையும் அவர் மேல் பரிதாபம் கூடும்.
தாத்தாவை அவர் மகன் பக்கத்து வீட்டிற்கு அழைத்து வந்த சமயம் தாத்தா ஒரு எழுதுபலகையை வைத்து ஒரு நீள நோட்டில் எழுதிக்கொண்டிருப்பார். என்ன எழுதுகிறார் என அறிய ஆசைப்பட்டு பக்கத்து வீட்டிற்கு வடை கொடுக்கப்போகும் போது எட்டிப்பார்த்ததில் அது கட்டங்களும் கோடுகளும் நிறைந்த கணக்குபதியும் நோட்டு என அறிந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் சக மாணவர்கள் இந்த குறிப்பிட்ட தாளிற்காக கால்குலேட்டர் தேடி கால் கடுக்க அலைந்ததை பார்த்திருக்கிறேன். அத்தனை கடினமான கணக்குகளை அநாயசியமாக தாத்தா விரைந்து முடிப்பதை வியந்து பார்ப்பதை கண்ட அவரது மருமகள் வந்து வடையை வாங்கிக்கொண்டு, "வீட்ல சும்மா இருன்னா கேட்குதா கிழம்.. ஏதாச்சு கடைக்கு போயி கணக்கு பாக்குறேன்னு வீட்டுக்கு வந்து கிறுக்கிட்றுக்கு" என்று சபித்தபடி உள்ளே போனாள். தாத்தாவிற்கு காது மந்தம் என்று அன்றுதான் கண்டறிந்தேன்.
உண்மையில் மந்தமோ இல்லை அப்படி நடிக்கிறாரா என்று கண்டறிய மனம் விரும்பவில்லை.
வானத்தின் மேகமெல்லாம் ஒன்று கூடி, சேர்த்து வைத்த கடல்நீரையெல்லாம் கொட்டித் தீர்த்தபின் தெளிந்த வானின் வெறுமையை மனதில் உணரும் வேளையில் மொட்டைமாடிக்கு சென்று வேடிக்கை பார்ப்பது வழக்கம். அவ்வாறான நாட்களில் உலகின் மொத்த வெறுமையையும் தன் குழி விழுந்த கண்களில் சுமந்தவாறு குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருப்பார் தாத்தா. அலைகளற்ற கடலின் அமைதியையும், விண்மீன்களைத் தொலைத்த வானின் தவிப்பையும் அவர் விழிகளில் பார்த்ததுண்டு. முகத்தில் எவ்வித மாற்றமும் காட்டாமல், புன்னகையை மட்டும் அந்த விழி வானிலிருந்து உதிர்த்து விட்டு நடை தொடர்வார்.
சில தினங்களில் தாத்தா வீட்டினுள்ளிருந்து வெளி திண்ணைக்கு பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவருக்கென தனி பாய், தலையணை இன்ன பிற அத்தியாவசிங்கள் திண்ணைக்கு வந்தன – அவற்றை எடுப்பதற்கு அடிக்கடி அவர் வீட்டிற்குள் நுழையக்கூடாதென்பதற்காக.. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் வாசற்படியண்டை கிடப்பார். விண்மீனில்லாத வானம்போல் இருந்த விழிகள், வானம் தொலைத்த பறவை போல் ஆகின. கொஞ்சம் புன்னகை மட்டும் இல்லாதிருந்தால் அந்த கண்களுக்கு உயிர் இல்லையென முடிவுகட்டியிருப்பேன்.
வெறுமையினை பீடிக்கட்டுகளால் நிரப்பினார், இலவசமாக கிடைத்த இருமலைக்கொண்டு தன்னை அடுத்த வேளை சாப்பாட்டிற்காக வீட்டார் அழைக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்.
"தாத்தா..."
" ... "
"தாத்தா..."
தாத்தாவிற்கு காது உண்மையிலேயே மந்தம் தான் போல..
"யாருய்யா..?" என்றபடி கண்களை இடுக்கிப் பார்த்து, அடையாளக்குறியிடாத புத்தகத்தில் பல நாட்களுக்கு முன் படித்த வரியை அடையாளம் கண்டது போல எனை கண்டு, பீடியினால் கறுத்துப்போன உதடு திறந்து எண்பது வயதான வெள்ளைப் பற்களால் சிரித்தார். அருகில் அகால மரணமடைந்த பீடித்துண்டு தகனத்திற்காக காத்திருந்தது.
வார்த்தைகளால் சலனப்படுத்தப்படாத மௌனம் இழை இழையாய் அந்த திண்ணை நெடுகிலும் பரவியிருந்தது. வரண்டு கிடக்கும் பாலை நிலத்தில் மழை தூவ தயங்கி அமைதியாய் பார்க்கும் மேகம் போல மௌனத்தை கலைக்க மனமின்றி உயரத்தில் சிலந்தி பாதி பின்னி வைத்த வலையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
"நல்லா படிக்கிறியா..?", படுக்கை விரிப்பை சரி செய்தபடி என்னைப் பார்க்காமல் கேட்டார்.
" ஆங்.. காலேஜ் முடிச்சிருக்கேன்.."
"என்ன படிச்ச..?"
"இங்கிலீஷ்... அது.. ஆங்கிலம் படிச்சேன்.."
"இங்கிலீஷ் லிட்ரேச்சர்னு சொல்லு, ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரனெல்லாம் படிச்சிருப்பியே..!"
ஆண்டாண்டு காலமாக மேலெழுந்து, வானுயர கிளை பரப்பி, தரையெங்கும் நிழல் தூவி, விழுது விட்டு படர்ந்து நிற்கும் ஆலமரம் ஒன்றின் வேர் நுனியில், பட்டுப்போய் கிடந்து முந்தைய நாள் மழையில் துளிர்விட்டு நிற்கும் சிறு புல் போல் என்னை உணர்ந்தேன்.
"அது.. வந்து.. ஆமா தாத்தா.. உங்களுக்கு எப்படி இதெல்லாம்...
" எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு கேக்றியா..? இப்போ மாதிரி இல்ல.. அந்த காலத்துல கெடச்சதெல்லாம் படிப்போம். நா படிச்சதென்னமோ வட்டமும் சதுரமும் தா.. சிநேகிதனுங்க இருக்கானுவல்ல.. எல்லாம் சொல்லுவானுக, கம்பனும், ஷேக்ஸ்பியரும், ராமானுஜமும், ஐன்ஸ்டீனும்.. எல்லாம் தெரியும். எதுக்கு ராசா இதெல்லாம்..? எல்லாம் தெரிஞ்சு என்ன பிரயோசனம்.. ஈயும் கொசுவும் விரட்ட ஐன்ஸ்டீன் எது..க்..எதுக்..எதுக்கு..?
குட்டித்தூக்கம் போட்டிருந்த இருமல் பேச்சு சத்தம் கேட்டு விழித்துக்கொண்டது போலும்.. சதை குறைந்து புடைத்து நின்ற குரல்வலை இரண்டொரு முறை ஏறி இறங்கி, தொண்டைக்குள் பாதியும் கழுத்தில் மீதியுமாய் கொஞ்சம் தண்ணீரை விழுங்கி தண்ணீர் சொம்பை ஜன்னல் ஓரமாய் வைத்து திரும்பினார்.
"எல்லா ஒரு காலம் வரைக்கும் தா.. இந்த படிப்பு பட்டம், ஒன்னுத்துக்கும் உதவாது.. கல்யாணம் ஆச்சு, புள்ளகுட்டிங்க பொறந்துச்சு, படிப்பு படிப்புன்னு அதுங்களயும் என்ன மாதிரி ஆக்கிட்டேன்.. எந்திரமாகிட்டாங்கய்யா.. ஊர்ல நாலு கடைல கணக்கு பாத்து சம்பாரிச்சு சொந்த காசுல கௌரவமா இருந்தேன்.. எதுக்குப்பா அங்க கஷ்டபடற, நா பாத்துகிறேன்னு வரசொன்னான்.. ஒரு வாரம்.. நல்லா தா இருந்துச்சி.. தேவையானதெல்லாம் தேடி வந்துச்சு, நல்ல மரியாத.. இப்பவும் எல்லாம் தேடி வருது.. என்ன.. தெருவுக்கே தேடி வருது..
"எதையெல்லாம் சரின்னு நெனச்சு பண்றோமோ, மத்தவங்களுக்கு நடக்குதேன்னு நாமளும் அத பண்ணாலோ, வலி மட்டும்தா ராசா மிச்சம்.. புலிய பாத்து பூன சூடுவெச்சிக்கிட்டாப்ல.. எவனோ சொல்றான்னு புள்ளைக்கு புடிக்காதத படிக்கவச்சேன். அவனும் அப்பன் காசும் மனசும் நோகக்கூடாதேன்னு படிச்சான்.. துவரங்கொட்டய பயிர் வச்சா அவரக்கொட்டையா மொளைக்கும்..? புடிக்காத படிப்ப படிச்சு புடிக்காத வேலைல சேந்தான்..
"பொண்டாட்டி தோச சுட்டு குடுக்காததுனால சோர்ந்துபோயி அரண்மனைல மயக்கம்போட்ட வீரன் ஒருத்தன், ராசாட்ட திட்டு வாங்கி வந்து, அந்த கோவத்துல பொஞ்சாதிய அரஞ்சானாம்.. அந்த மாதிரி, வேல புடிக்காத கோவத்த என் மகன் எம்மேல காட்ட ஆரம்பிச்சிடான்.. தெய்வம் நின்னு கொல்லுது கண்ணா, என்ன பண்ண....ட்டு..ம்..
இந்த முறை இருமல், வார்த்தைகளை உறிஞ்சி வலுப்பெற்றிருந்தது.. தேக்கி வைத்த வார்த்தை யாவும் அணை கடக்கும் வெள்ளம் போல் வெளிவந்துகொண்டிருந்தது. என்ன நினைத்தாரோ, சிரித்துக்கொண்டிருந்த கண்கள் உடலி்ன் நீரெல்லாம் உறிஞ்சி கீழ் இமைகளில் சிறை வைத்தது. நான் அங்கே வரும்போது பாதி புகைக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட பீடித்துண்டை நீர் நிறைந்த விழியோடு வெகு நேரம் பார்த்தார். அந்த துண்டு பீடியில் அவரையே அவர் பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அவர் முழுவதும் எரிந்து முடிந்திருக்க விரும்பியிருந்தாக நினைத்துக்கொண்டு கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரின் தடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.
"ஊருல இருந்த வீட்ட வித்துட்டான்.. இங்கன வந்து இருக்க சொன்னான். வந்த வருசத்துலயே மகராசி ஜன்னி கண்டு போயிசேந்துட்டா.. ஒத்தையில என்ன பண்ணனுன்னு தெரிலய்யா.. சில கடைகளுது கணக்கு வாங்கியாந்து பாத்திட்ருந்தேன். மருமக ஒரு நாள் பாத்தா, மறுநாள் எந்த வேலையும் செய்ய வேணாம்னுடான். ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதும்பாக.. நம்ம கையும் அப்புடிதா. முந்தி ரண்டு மூனுன்னு இருந்த பீடி ஒரு நாளிக்கி பத்துன்னுலா போக ஆரம்மிச்சிச்சு.. ஊரில் இன்னிக்கு நா நடந்து போனாலும் பத்து பேரு நின்னு வணக்கம் சொல்லி பேசிட்டு போவான். இங்க.. இங்க.. என்னனு கேக்க ஒரு ஆளில்லய்யா..
கிளிய புடிச்சு கூண்டுல அடச்சு, ரக்கய வெட்டி வுட்டாப்ல இருக்கு.. நா கிளி இல்ல தா.. ஆனா மனுசன்யா.. மனசு இருக்கே.. ஆயிரம் யோசிக்கும், இருந்த இடத்துல இருந்தபடியே ரண்டாயிரம் மைலுக்கு அப்பால என்ன கெடக்குன்னு ஆராயும். எங்க காலத்து பாட்டு திடீர்ன்னு மனசுல முணங்கும், சொந்த ஊரு நெனப்பும், சோடியா இருந்தவளும் கண்ணு முன்ன சிரிக்கும்.. யாருட்டயா சொல்லுவேன்.. மனசு பொறுக்காம காக்காய்ங்க கிட்டயும் அணிலுவ கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். பைத்தியக்கார பட்டம் கட்டிட்டாங்ய்யா.. அதுகூட பரவால்ல.. ரண்டு தளிர் மாதிரி பேத்திங்க இருந்தும் பக்கத்துல அண்ட விடமாட்றாங்கய்யா.."
ஒற்றைத்தடமிட்டு ஓடிக்கொண்டிருந்த கண்ணீர் கன்னம் நிறைத்தது. தாத்தா, குழந்தைபோல தேம்பிக்கொண்டிருந்தார். என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் நானும், என்ன சொன்னாலும் தேறப்போவதில்லை என்ற முடிவோடு அவரும் எவ்வளவு நேரம் இருந்தோம் என்று தெரியாது. ஒரு பெரும் புயலுக்கு பின்னான அமைதி அங்கு நிலவியது. தாத்தா சொல்வதும் சரிதான், இன்னொருவரிடம் இரண்டு நிமிடம் முகம் கொடுத்து பேச இயலாமல் ஆயுள் முழுக்க பணத்தையும் பதவியும் கௌரவமும் தேடித்தேடி என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் ஒரு அலைபோல் எழுந்து எழுந்து மனதை நிறைத்தது.
அழுது சிவந்த அவரது கண்கள் பத்து வருடக்கதையை அதனுள் சிறு சிறு துகளாக உடைத்து உள்வைத்திருப்பதைக் காட்டின. உடைபட்ட துகள்கள் கண்ணீரால் கோர்க்கப்பட்டு வழிந்ததை துடைத்து நிமிர்ந்தார். பெயர் தெரியாத ஏதோ ஒரு பறவை உரத்த குரலில் உலறிக்கொண்டிருந்தது. பதில் குரல் ஏதேனும் வருகிறதா என்று பார்த்து வராமற் போகவே, மீண்டும் கத்தத் தொடங்கியது. யாருக்குத்தெரியும், அதனினத்திலும் அதற்கு பைத்தியப்பட்டம் கட்டப்பட்டிருக்கும்..
தெருமுனையில் மரங்கள் பயப்படும் அளவு அலறிய ஹாரன் சத்தத்தைக் கேட்டு மருமகள் வருவதறிந்த தாத்தா கண்ணைத் துடைத்து தண்ணீர் குடித்து ஆசுவாசமானார். எதோ ஒன்றை எதிர்பார்த்து என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"வந்து ரொம்ப நேரமாச்சாப்பா..? என்ன விஷயம்..? ஓஹோஹோ.. அம்மா பூ குடுத்து விட்டாங்களா.." என்று நிற்க நேரமின்றி கேட்க பொறுமையின்றி கால் தரையில் நிற்காமல் உள்நுழைந்தார் அந்த அம்மா.
"இல்ல இப்போதா வந்தேன்.. போயிட்டு வரேன்" என்று அவரிட உரக்க கூறி திரும்பும்போது தாத்தா எதற்காகவோ அவர் வழக்கமாய் அணிந்திருக்கும் புன்னகையோடு கையசைத்தார். இனி நீங்கள் சுவரிடம் பேசவேண்டியிருக்காது என்று மனதில் நினைத்தபடி வீடு திரும்பினேன்..